மகளிர் சுய உதவிக் குழு உற்பத்திப் பொருட்கள் விற்பனை உயர்வு - துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.

Published Date: November 24, 2025

CATEGORY: CONSTITUENCY

முதல்வர் மு.க. ஸ்டாலின் அளிக்கும் ஊக்கம் காரணமாக, மகளிர் சுய உதவிக் குழுக்களின் உற்பத்திப் பொருள்கள் விற்பனை ரூ.620 கோடியாக உயர்ந்துள்ளதாக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.

மதுரை தமுக்கம் மாநாட்டு மையத்தில் மகளிர் திட்டம் சார்பில், ஊரக கைவினைஞர்கள் உற்பத்திப் பொருட்கள் விற்பனைக் கண்காட்சி (சரஸ்) உணவுத் திருவிழாவை சனிக்கிழமை தொடங்கி வைத்த அவர் மேலும் பேசியதாவது:

கடந்தாண்டு சென்னையில் ஊரக கைவினைஞர்கள் உற்பத்திப் பொருட்கள் விற்பனைக் கண்காட்சி (சரஸ்) உணவுத் திருவிழா 5 நாட்கள் நடத்தப்பட்டது. இதில் ரூபாய் 1.55 கோடிக்கும் அதிகமான பொருட்கள் விற்பனையாகின. தற்போது மதுரையில் 12 நாட்கள் இந்த கண்காட்சி நடைபெறவுள்ளது. இதில் கடந்த ஆண்டு விட அதிக அளவில் பொருட்கள் விற்பனையாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. மகளிர் சுய உதவிக் குழுக்களின் தயாரிப்பில் உருவாக்கும் பொருட்களைக் கொள்முதல் செய்வது அவர்களின் தன்னம்பிக்கைக்கு அளிக்கும் ஊக்கமாகும்.

முந்தைய 10 ஆண்டுகால ஆட்சியில் இந்தக் குழுக்களின் உற்பத்தி பொருட்கள் விற்பனை ஆண்டுக்கு ரூபாய் 10 கோடி என்று அளவிலேயே இருந்தது. கடந்த நான்கரை ஆண்டுகளாக தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அளித்து வந்த ஊக்கம் காரணமாக நிகழாண்டில் மட்டும் ரூபாய் 620 கோடிக்கு சுய உதவி குழுக்களின் உற்பத்தி பொருள்கள் விற்பனையாகி சாதனை படைக்கப்பட்டுள்ளது.

பெண்கள் பொருளாதார சுதந்திரம் அடைய வேண்டும் என்ற நோக்கத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்துகிறார். தொழில் வாய்ப்புகளைத் தேடி வந்த பெண்கள் அரசின் ஊக்கத்தால் தற்போது தொழில் முனைவோராக உயர்ந்துள்ளனர். பெண்களின் மேம்பாட்டுக்கு முக்கியத்துவம் அளிக்கும் முதல்வர் மு.க. ஸ்டாலின் முயற்சிகளுக்கு பெண்கள் உறுதுணையாக இருக்க வேண்டும் என்றார் அவர்.

இதை அடுத்து மதுரை மாவட்டத்தை சேர்ந்த 500 மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு அடையாள அட்டைகள் வழங்கும் பணியை அவர் தொடங்கி வைத்தார்.

இந்த விழாவில் வணிகவரி, பதிவுத்துறை அமைச்சர் பி. மூர்த்தி, தகவல் தொழில்நுட்பவியல் எண்ம சேவைகள் துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், ஊரக வளர்ச்சி, ஊராட்சித் துறை கூடுதல் தலைமைச் செயலர் ககன் தீப் சிங் பேடி, தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் மேலாண் இயக்குனர் ஷஜீவனா, மாவட்ட ஆட்சியர் கே.ஜே.பிரவீன் குமார், மாநகராட்சி ஆணையர் சித்ரா விஜயன், சட்டப்பேரவை உறுப்பினர்கள் கோ. தளபதி, மு.பூமிநாதன், ஆ. வெங்கடேசன், துணை மேயர் தி. நாகராஜன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

பிரம்மாண்ட கண்காட்சி : 

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த மகளிர் சுய உதவி குழுக்களின் உற்பத்தி பொருட்கள் ஆந்திரம், கேரளம், மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்களை சேர்ந்த மகளிர் சுய உதவிக் குழு உறுப்பினர்களின் கைவினைப் பொருள்கள் 150 க்கும் அதிகமான அரங்குகளில் விற்பனைக்கு காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. உணவுத் திருவிழாவில் 30க்கும் அதிகமான அரங்குகளில் மகளிர் சுய உதவிக் குழுவினர் தயாரித்த உணவுப் பொருள்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தன.

Media: Dinamani